Published On:Tuesday, March 19, 2019
ஒரே ஒரு பெண்ணுக்காக வாக்குச்சாவடி அமைத்த தேர்தல் ஆணையம்!

அருணாச்சல்-சீன எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் தேர்தல் ஆணையம் ஒரே ஒரு பெண்ணுக்காக வாக்குச்சாவடி அமைத்துள்ளது.
இந்தியாவின் அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் திகதி நடைபெற உள்ளது.
இதற்காக வாக்குச்சாவடிகள் அமைத்தல் போன்ற தேர்தலுக்கான வேலைகளில் தேர்தல் ஆணையம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், அருணாச்சல்-சீன எல்லையில் உள்ள மலோகம் கிராமத்தில் ஒரே ஒரு பெண்ணுக்காக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
அந்த கிராமத்தில் ஒரு சில குடும்பங்களே வசிக்கின்றன.
ஆனால், அங்குள்ள வாக்காளர்கள் அனைவரும் வேறு பொதுவான வாக்குச்சாவடியில் தங்களது பெயரை பதிவு செய்த நிலையில், ஜனில்-தயாங் என்ற தம்பதி மட்டும் பதிவு செய்யாமல் இருந்தனர்.
இதனால் 2014ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கு மட்டும் தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கணவர் ஜனிலும் தனது பெயரை வேறு வாக்குச்சாவடிக்கு மாற்றிவிட்டார். ஆனால், தயாங் மாற்றவில்லை என்பதால் அவருக்காக மட்டும் வாக்குச்சாவடி அமைக்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டது.
இதுகுறித்து தேர்தல் அதிகாரி கூறுகையில், ‘தயாங் என்ற ஒரு பெண்ணின் ஓட்டுக்காக நாங்கள் வாக்குச்சாவடி அமைத்துள்ளோம். அவர் எப்போது வந்து ஓட்டுப்போடுவார் என கூற முடியாது. நாங்கள் வற்புறுத்தவும் உரிமை இல்லை.
நாங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அவருக்காக காத்திருப்போம்’ என தெரிவித்துள்ளார். மலோகம் கிராமத்திற்கு செல்ல சரியான பாதை வசதி இல்லாததால், தேர்தல் அதிகாரிகள் அனைத்து பொருட்களையும் சுமந்தே அங்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.